சூர்யாவை தலைசிறந்த தலைவர் ஆக்குவோம் - பிரதமரிடம் சொன்ன அண்ணாமலை
சூர்யாவை தலை சிறந்த தலைவராக ஆக்குவோம் என்று பிரதமரிடம் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. தமிழக பாஜகவின் மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜி.சூர்யாவுக்கு பிரதமரின் அறிமுகம் முன்பே இருந்ததால் அவரும் சிரித்து சரி என்று சொல்லி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26 ஆம் தேதி அன்று சென்னை வந்திருந்தார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் நிறைவேறிய திட்டங்களை அர்ப்பணிப்பதற்காகவும் சென்னை வந்திருந்தார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அரசியல் கட்சித் தலைவர்களையும் பாஜக பிரமுகர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார் .
அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜகவின் முக்கிய பிரமுகர்களை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யாவை பிரதமருக்கு அறிமுகப்படுத்தியபோது, விரலை சுட்டிக்காட்டி, ’சூர்யாவை நாம் வருங்காலத்தில் தலைசிறந்த தலைவர் ஆக்குவோம்’என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பிரதமர் மோடியும் சிரித்தபடியே தலையசைத்து இருக்கிறார்.
இதுகுறித்து எஸ். ஜி. சூர்யா, ‘’பிரதமர் நரேந்திரமோடி என் அருகில் சில கணம் நின்றார். அண்ணாமலை அண்ணன் பிரதமருக்கு ஒரு வாக்களித்தார். "நாம் சூர்யாவை வருங்காலத்தில் தலைசிறந்த தலைவராக ஆக்குவோம்" என்றார். இது வார்த்தைகளல்ல, என் வாழ்வின் அர்த்தம். மனம் நெகிழும் உயிர் மலரும் இத்தருணத்தை சாத்தியமாக்கிய கடவுளுக்கும் நன்றி.’’ என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும், ’’ விரலை சுட்டிக்காட்டிய அந்த கணத்தை கச்சிதமாக புகைப்படம் எடுத்த அவருக்கும் கோடான கோடி நன்றி’’ என்று தெரிவித்திருக்கிறார்.
வருங்காலத்தில் சூர்யாவை சிறந்த தலைவர் ஆக்குவோம் என்று அண்ணாமலை சொன்னதற்கு பின்னால் சூர்யாவின் உழைப்பு இருக்குது என்கிறார்கள். பிரதமருக்கும் சூர்யாவுக்கும் முன்னரே நிறைய அறிமுகங்கள் இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் குஜராத் மாநில தேர்தலில் பாஜக சிறப்பு தகவல் தொழில்நுட்ப பிரிவில் இடம்பெற்றிருக்கிறார் சூர்யா. அடுத்து 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பு தகவல் தொழில்நுட்ப குழுவிலும் இடம்பெற்று முக்கிய பங்காற்றி இருந்திருக்கிறார். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு முன்னரே நன்கு பரிச்சயமானவர் ஆக இருந்திருக்கிறார். அதனால் அண்ணாமலையும் குறிப்பிட்டு சொன்னதும் அவரும் தலையசைத்து சிரித்திருக்கிறார்.