பிரதமர் நரேந்திர மோடி ஒரு டூப்ளிகேட்... ஐக்கிய ஜனதா தளம் தலைவர் குற்றச்சாட்டு

 
மோடி

அரசியலுக்காக சாதியை பொய்யாக்கினார் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி ஒரு டூப்ளிகேட்,  ஒரிஜினல் அல்ல என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் லாலன் சிங் குற்றம் சாட்டினார்.


பீகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் இணைந்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் நிதிஷ் குமார் கட்சி பா.ஜ.க.வை விட குறைவான இடங்களை வென்ற போதிலும்,  பெரும்பான்மையான இடங்களை அந்த கூட்டணி கைப்பற்றியது. இதனையடுத்து பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. 

ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.

இந்நிலையில்  நிதிஷ் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம்  பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ்  மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார். அது முதல் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது பிரதமர் மோடி அசல் அல்ல போலி என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.

லாலன் சிங்

ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் லாலன் சிங் பாட்னாவில் கூறியதாவது: 2014ல் பிரதமர் நரேந்திர மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று கூறி நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார். குஜராத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே உண்டு. குஜராத் முதல்வராக பதவியேற்றதும் தனது சாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்த்தார். அவர் (மோடி) ஒரு போலி, அசல் அல்ல இவ்வாறு அவர் தெரிவித்தார்.