"இதெல்லாம் ஸ்டாலின்கிட்ட கேக்க தில்லு இருக்கா திருமா?" - எல்.முருகன் ஆவேசம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆர்எஸ்எஸ், பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அவர்களின் கொள்கைகளை எதிர்த்து சனாதன எதிர்ப்பு மாநாட்டையும் நடத்திக் காட்டியவர். அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசிய அவர், "பகுத்தறிவு கருத்துகள் மூலமாக மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே ராமாயணம் மகாபாரதம் போன்ற புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்துள்ளனர்.
சனாதன இந்தியாவில் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் நீதி கிடையாது. தனித்தனி தீவுகளாக இருந்த சமூகங்களை மாற்றி அமைத்ததில் இரண்டு இதிகாசங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என இரண்டு காரணங்களுக்காக தலித் மற்றும் பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகி வருகின்றனர். இந்தியர்களை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இரு அமைப்பினரும் பிரிக்கிறார்கள்.
தலித்துகளை சேர்த்துக்கொண்டு சிறுபான்மை வெறுப்பு அரசியலைக் விதைக்கிறார்கள். வன்முறை யுக்திகளைக் கையாளுகின்றனர். பாஜகவுக்கும் அரசுக்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான். அதனை தூக்கியெரிவதே அவர்களது மறைமுக நோக்கம்” என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "புராணங்கள் இதிகாசங்கள் குப்பைகள் என திருமாவளவன் கூறியுள்ளது கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.
ராமாயணமும் மகாபாரதமும் இந்திய தேசத்தின் இதிகாசங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை நல்நெறி இதிகாசங்கள் என போற்றியுள்ளனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து ஒருவர் பாஜகவில் இருந்தால் அவர் சுயநலவாதி என்கிறார். அவர் எந்த சுயநலமும் இல்லாமல் இருக்கிறாரா? அவருடைய நோக்கம் என்ன? பாஜக ஆட்சியில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்? தமிழ்நாட்டில் பட்டியில் என அமைச்சர் எங்கு இருக்கிறார்? இதனை கூட்டணியில் இருக்கும் திருமா கேட்பாரா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.