எல். முருகன் -அண்ணாமலை மோதல்! திருச்சி சூர்யா பரபரப்பு
அண்ணாமலையின் வளர்ச்சி எல். முருகனுக்கு பிடிக்கவில்லை. அண்ணாமலைக்கு எதிராக பேசும் காயத்ரி ரகுராமின் பேச்சுக்கள் எல்லாம் எல். முருகனின் பேச்சாகத்தான் பார்க்கும்படி இருக்கிறது என்று பாஜகவுக்குள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் அக்கட்சியில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா சிவா.
திமுகவின் எம்பி யாகவும் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் அண்மையில் திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநில பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் பாஜகவின் பெண் நிர்வாகி மீது டெய்சிசரணுடன் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் அவர் மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் பாஜகவிற்குள் இருந்த பெண் நிர்வாகி காயத்ரி ரகுராமே தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா சிவாவின் ஆடியோவை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்டவருக்கு மாநில பொறுப்பு வழங்க வேண்டுமா? என்று மாநில தலைமையை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ஆரம்பம் முதற்கொண்டு அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் இந்த ஆடியோ விவகாரத்தில் அவரை ஆறு மாதம் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார் அண்ணாமலை. அதன் பின்னரும் தலைமைக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை சொல்லி வந்ததால் காயத்ரி வகித்து வந்த பொறுப்புக்கு இசையமைப்பாளர் தினாவை நியமித்திருக்கிறார் அண்ணாமலை.
டெய்சி சரண் ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யா சிவாவையும் 6 மாதம் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்திருந்தார் அண்ணாமலை. ஆனால் டெய்சி சரண் சூர்யா சிவா இருவரும் சமாதானமாகியும் இருந்தார்கள். ஆனாலும் அண்ணாமலையின் ஆதரவாளர் சூர்யா என்கிற சலசலப்பு பாஜகவில் இருந்து கொண்டே இருந்தது . அதனால்தான் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று காயத்ரி ரகுராமும் குற்றம் சாட்டிக் கொண்டே வந்தார்.
இந்த நிலையில் சூர்யா, தான் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக சொல்லி வெளியேறி விட்டார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டியில் , நானும் டெய்சி சரணும் பேசிய ஆடியோவை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மொத்தம் 18 நிமிடங்கள் பேசியிருக்கும் அந்த ஆடியோவில் ஆறு நிமிடங்கள் மட்டுமே நான் மட்டும் அதிகம் பேசுவது மட்டும் கட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணை ஆபாசமாக பேசி விட்டதால் உடனே அந்த ஆடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்ததாக சொல்லி இருக்கிறார் காயத்ரி ரகுராம் . ஆனால் இதற்கு முன்பு ராகவன் வீடியோ வெளியானபோது அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏன் காயத்ரி கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால்தான் அவர் பிராமணர் என்பதால் கண்டனம் தெரிவிக்கவில்லையா என்ற சலசலப்பு கட்சிக்குள் எழுந்திருக்கிறது.
அண்ணாமலை பிராமணர் அல்ல நானும் பிராமணர் அல்ல. இதனால் தான் நான் அண்ணாமலையின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டம் எழுந்திருக்கிறது. பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறேன் என்று என் விஷயத்தில் காயத்ரி ரகுராம் சீறும் போது ராகவன் விவகாரத்தில் ஏன் சீறவில்லை என்ற கேள்வி தலைமைக்கு இருக்கிறது.
தமிழகத்தில் அண்ணாமலையின் வளர்ச்சி எல்லாம் பார்த்து பாஜகவினர் நெகிழ்ந்து போய் இருக்கும் நிலையில் , கட்சிக்குள்ளே இருந்து கொண்டு அவற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம். ஒரு கூட்டம் கூடும்போது இது அண்ணாமலைக்காக கூடிய கூட்டம் இல்லை என்று தலைமையை மிகவும் கடுமையாக விமர்சிக்கிறார். அண்ணாமலையை சிறுமைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து இப்படி இயங்கிக் கொண்டே இருக்கிறார்.
அண்ணாமலைக்கு முன்பு தமிழக பாஜகவில் தலைவர்களாக இருந்த பலரையும் விமர்சிக்கிறார். எச். ராஜா போன்ற மூத்த தலைவர்களையும் விமர்சிக்கிறார். ஆனால் ஒரே ஒருவரை மட்டும் அவர் விமர்சிக்கவில்லை. அவர் எல். முருகன்.
எல். முருகனுக்கு அண்ணாமலையின் வளர்ச்சியின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார். அண்ணாமலையால் தான் தமிழக பாஜகவில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் . இதனால் தான் அவர் காயத்ரி ரகுராம் மூலமாக தனது கருத்துக்களை பரப்புகிறார் என்று சலசலப்பு இருக்கிறது. காயத்ரியின் பேச்சுக்கள் எல்லாம் எல்.முருகனின் பேச்சுக்களாக இருக்கிறது என்கிறார்கள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
காயத்ரி ரகுராம் எல். முருகன் ஆதரவாளர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. என் ஆடியோவை வானதி அக்காவுக்கும் டெல்லியில் ஒருவருக்கும் அனுப்பினேன் என்று சொல்கிறார் காயத்ரி . டெல்லியில் உள்ள அந்த நபர் யார்? அவர்தான் எல். முருகன்.
கேசவ விநாயகமும் எல்.முருகனும் ஒரு அணியில் இருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் இருவரும் அண்ணாமலைக்கு எதிராக செயல்படுகிறார்கள் . மாநிலத் தலைவராக இருந்தபோது சில நிர்வாகிகளை நியமித்து இருந்தார். அவர்கள் மூலமாக இப்போது அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அதன் பின்னர் மத்திய அமைச்சராகி விட்டார். அப்படி இருக்கும்போது அவர் ஒதுங்கிக் கொள்ளாமல் இருக்கிறார். டெல்லியில் இருந்து கொண்டே இங்கு அண்ணாமலைக்கு இடையூறுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கு விளக்கம் கொடுங்கள் என்று ஒரு மாநில தலைவரை பார்த்து கேட்கிறார் காயத்ரி ரகுராம். அவரை இப்படி பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அப்படி என்றால் அவரை நோக்கம் என்ன?
தமிழிசை அக்கா, பொன்னார் மாநிலத் தலைவராக இருந்தபோது அவர்கள் சார்ந்த சமூகத்தை அதிகம் பாஜகவிற்கு கொண்டு வந்தார்கள். அதேபோல் எல். முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோது அவர் சார்ந்த சமூகத்தை பாஜகவிற்குள்ளும் நிர்வாகத்திற்குள்ளும் கொண்டு வந்தார். ஆனால் அண்ணாமலை அப்படி செய்யவில்லை.
டெல்லியில் இருந்து கொண்டு இங்கிருந்து வரும் செய்திகளை வைத்து லாபி செய்கிறார் முருகன். என் ஆடியோ விவகாரத்தில் கூட டெல்லியில் இருந்து கொண்டு எல்லோரிடமும் பரப்பினார் முருகன்.