கட்சியை நடத்தும் தோல்வி கும்பல் உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ்
பா.ஜ.க.வின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சுவேந்து ஆதிகாரியை கட்சியை நடத்தும் தோல்வி கும்பல் உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கேள்விபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் நடந்த 108 உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு நகராட்சியில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. கிழக்கு மிட்னாப்பூரில் உள்ள கண்டாய் நகராட்சியை பா.ஜ.க. கைப்பற்ற தவறியது மட்டுமல்லாமல், பா.ஜ.க. எம்.பி. சுவேந்து ஆதிகாரி வசிக்கும் வார்டிலும் பா.ஜ.க. தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற பா.ஜ.க.வின் முதல் கூட்டம் என்பதால் இது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து ஆதிகாரி கலந்து கொள்ளவில்லை.
பா.ஜ.க. கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று சுவேந்து ஆதிகாரி கட்சி தலைமையிடம் தெரிவித்ததாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் பா.ஜ.க.வின் அமைப்பு கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி கலந்து கொள்ளாததை திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது: கட்சியை நடத்தும் தோல்வி கும்பல் உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கேள்விப்பட்டேன். இது இயற்கையானது. அவர் தனது சொந்த வார்டில் தோற்றார். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட அவகரமான தோல்விக்கு பிறகு பா.ஜ.க. சுயபரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று அந்த கட்சி எம்.பி. ஒருவர் கூறியதாக கேள்விப்பட்டேன். தற்போதைய மாநில தலைவர்கள் எம்.பி.யிடம் இருந்து சில தனிப் படிப்புகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.