மோடியின் நண்பர் கவுதம் அதானி விவசாயிகளிடம் ஆப்பிளை ரூ.70க்கு வாங்கி, ரூ.300க்கு விற்கிறார்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
கவுதம் அதானி

மோடியின் நண்பர் கவுதம் அதானி, இமாச்சல பிரதேச ஆப்பிள் விவசாயிகளிடம் ஆப்பிளை (கிலோ) ரூ.70க்கு வாங்கி, ரூ.300க்கு விற்கிறார், விவசாயிகளை மொத்தமாக சுரண்டுகிறார்கள் என்று இமாச்சல பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் குற்றம் சாட்டினார்.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு  புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசம் தியோக் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் போட்டியிடுகிறார். கட்சி நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக அனுபவம் இருந்தபோதிலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில்தான் முதல் முறையாக போட்டியிட உள்ளார். இது குல்தீப் சிங் ரத்தோருக்கு செலவு இல்லாத தேர்தல்  விளம்பரமாக அமைந்து விட்டது. காங்கிரஸின் மூத்த தலைவரான குல்தீப் சிங் ரத்தோர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆப்பிள் பெல்ட்டான எனது தியோக் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

குல்தீப் சிங் ரத்தோர்

மாநில ஆப்பிள் தொழிலின் மதிப்பு  ரூ.5 ஆயிரம் கோடி. மாநில ஆப்பிள் துறை வேலைவாய்ப்பை உருவாக்குகிறது மற்றும் மாநில பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. தொற்றுநோய்களின் போது இது ஒரே பிரகாசமான இடமாக இருந்தது. ஆனால் தேவையான கவனத்தை பெறவில்லை. ஆப்பிள் விவசாயிகள் பயன்படுத்தும் பூஞ்சைக் கொல்லிக்களுக்கான மானியத்தை தற்போதைய அரசு நிறுத்தியுள்ளது. ஒரு பெட்டி ஆப்பிளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச ஆப்பிள் துறையை காப்பாற்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை. 

ஆப்பிள் தோட்டம்

பெப்சி-கோலா பானங்களில் ஆப்பிள் ஜூஸ் கலந்து கொடுப்பதாக அவர்கள் (ஆப்பிள் ஜூஸை காற்றோட்டமான பானங்களுடன் இணைப்பது குறித்து பிரதமர் கூறிய அறிக்கையின் குறிப்பு) உறுதியளித்தனர். அது ஒரு பெரிய நகைச்சுவையாக இருந்தது. இந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த பார்முலாக்களை கொண்டிருக்கின்றன. அவை ஏன் ஆப்பிள் ஜூஸை பயன்படுத்த போகிறார்கள்?. பிரதமர் நரேந்திர மோடியின் தொழிலதிபர் நண்பரான கவுதம் அதானி இந்த பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டல ஸ்டோர்களை கட்டியுள்ளார். கவுதம் அதானி விவசாயிகளிடம் இருந்து ஆப்பிளை ரூ.70-72 (கிலோ) வாங்கி, ரூ.250-300க்கு விற்பனை செய்கிறார். ஆப்பிள் விவசாயிகளை மொத்தமாக சுரண்டுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.