நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் பா.ஜ.க.வுக்கு இந்திய வரலாறு தெரியும்... காங்கிரஸ்

 
குல்தீப் சிங் ரத்தோர்

நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் பா.ஜ.க.வுக்கு இந்திய வரலாறு தெரியும் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பிலாஸ்பூரில் நடைபெற்ற பேரணியில் ஜே.பி. நட்டா பேசுகையில், இந்திய தேசிய காங்கிரஸில் இந்தியா இல்லை, தேசியமும் இல்லை, காங்கிரஸ் கூட இல்லை. அது வெறும் சகோதரன்-சகோதரி கட்சிதான் என தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவர் (ஜே.பி. நட்டா) அப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு முன் காங்கிரஸின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்கு காங்கிரஸ் நிறைய பங்களித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் பங்களிப்பு இல்லை. 

ஜே.பி.நட்டா

பா.ஜ.க. இரண்டு நபர்களின் கட்சியாக மாறி விட்டது. பா.ஜ.க. தனது கட்சியின் பெயரை மோடி-ஷா கட்சி என்று மாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வரலாறு உண்டு. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்துள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாட்டின் நலனுக்காக பா.ஜ.க. என்ன பங்களித்துள்ளது?. நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் பா.ஜ.க.வுக்கு இந்திய வரலாறு தெரியும். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமித் ஷா, மோடி

எதிர்வரும் மாநகராட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடையும். காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்யும். அமைப்பில் (கட்சி) மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன. மேலும் மாநில அளவில் மாற்றங்களை கட்சி மேலிடம் எடுக்கிறது. அதேசமயம் மாவட்ட அளவில் அது மாநிலத்தின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.