ஓபிஎஸ் நடத்திய கோமாதா பூஜை
நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததுமே பொதுக்குழுவுக்கு செல்வது என்று முடிவெடுத்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டில் உடனே கோமாதா பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்தார். அதன்படி கோமாதா பூஜை செய்துவிட்டு பின்னர்தான் தனது ஆதரவாளர்களாக 6 மாவட்ட செயலாளர்களுடன் பொதுக்குழுவிற்கு புறப்பட்டுச்சென்றார்.
அதிமுகவில் தனித்தீர்மானம் நிறைவே தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உயர்நீதிமன்ற தனி நீதிபதி நிராகரித்துவிட்டாலும், நம்பிக்கையுடன் மேல்முறையீடு செய்ய நள்ளிரவு 2 மணிக்கு மேல் விசாரணை நடந்து அதிகாலை 4.20 மணிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கபட்டிருக்கிறது.
இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் பட்டாசுகள் வெடிக்க, ஓபிஎஸ் தனது வீட்டில் கோமாதா பூஜை நடத்தியுள்ளார்.
மருந்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் தலைமையில் இந்த கோமாதா பூஜை நடந்துள்ளது. இதில் மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கோமாதா பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அதன் பின்னர் தனது மாவட்டச் செயலாளர்கள் 6 பேருடன் பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஓபிஎஸ்க்கு 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக இருந்த நிலையில் தற்போது 6 மா.செக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்பட 6 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவாக நிற்கிறார்கள்.
கட்சியினரில் 95 சதவிகிதம் பேரின் ஆதரவை எடப்பாடி பெற்றிருந்தாலும், அதிமுகவின் பைலாவை கையிலெடுத்து ஒற்றைத்தலைமை தனித்தீர்மானம் கொண்டு வரமுடியாமல் செய்துவிட்டார் ஓபிஎஸ்.