ஒவ்வொரு திட்டத்திலும் சமாஜ்வாடியின் ஸ்டிக்கர் ஒட்டும் இந்த நோயிலிருந்து விடுபடுங்கள்... அகிலேஷ் யாதவை தாக்கிய பா.ஜ.க.

 
அகிலேஷ் யாதவ்

ஒவ்வொரு திட்டத்திலும் சமாஜ்வாடியின் ஸ்டிக்கர் ஒட்டும் இந்த நோயிலிருந்து விடுபடுங்கள் என அகிலேஷ் யாதவை உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தாக்கினார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.  இந்த விவாதத்தில் அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, சமாஜ்வாடி ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை அமல் படுத்தியதாக பேசினார். அகிலேஷ் யாதவ் பேசிய பிறகு அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசுகையில் கூறியதாவது: அகிலேஷ் யாதவ் அவர் முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் செய்த பணிகளை பாராட்டி இருந்தார். அவரது பணி ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், தேர்தலில் சமாஜ்வாடியின் குளறுபடிகளை மக்கள் சுத்தம் (தோல்வி அடைய) செய்திருக்க மாட்டார்கள். 

கேசவ் பிரசாத் மவுரியா

எதிர்க்கட்சி தலைவர் (அகிலேஷ் யாதவ்) தனது ஐந்தாண்டு கால சாதனைகளை எண்ணி சோர்வடையவில்லை. உங்களுக்கு என்ன நோய்? ஏதேனும் நோய் இருந்தால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதிர்க்கட்சி தலைவர் எங்கிருந்து வேண்டுமானாலும் முறையான சிகிச்சை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு திட்டத்திலும் சமாஜ்வாடியின் ஸ்டிக்கர் ஒட்டும் இந்த நோயிலிருந்து விடுபடுங்கள். ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்டீர்கள். இப்போது மீண்டும் ஐந்தாண்டுகள் ஆட்சி கிடையாது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு உங்களுக்கு எண்ணிக்கை (5 ஆண்டு ஆட்சி) வராது. 

யோகி

சாலை, விரைவு சாலை, மெட்ரோவை யார் உருவாக்கியது? சைபாயில் உங்கள் நிலத்தை விற்று இதெல்லாம் கட்டப்பட்டது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மவுரியாவின் கருத்துக்களால் எரிச்சலடைந்த அகிலேஷ் யாதவ், மவுரியாவை வார்த்தைகளால் கடுமையாக பேசினார். சமாஜ்வாடி உறுப்பினர்களும் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக நின்றனர். இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தலையிட்டு,தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால், சட்டப்பேரவைக்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் மற்றும் மிரட்டல்களை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்கக்கூடாது என தெரிவித்தார்.