கடைசியில் பிரியங்கா, ராகுல், சோனியா காந்தி மட்டுமே காங்கிரஸ் கட்சியில் இருப்பார்கள்.. கேசவ் பிரசாத் மவுரியா கிண்டல்

 
பிரியங்கா, ராகுல்,சோனியா

கடைசியில் பிரியங்கா, ராகுல், சோனியா காந்தி மட்டுமே காங்கிரஸ் கட்சியில் இருப்பார்கள் என்று உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கிண்டலாக தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியது தொடர்பாக உத்தர பிரதேச துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம்  கூறுகையில், காங்கிரஸிலிருந்து பலர் சுதந்திரம் அடைந்து விட்டனர். அவர்களில் குலாம் நபியும் ஒருவர். சில காலம் கழித்து ராகுல் காந்தி,  சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா மட்டுமே கட்சியில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

கேசவ் பிரசாத் மவுரியா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த குலாம் நபி ஆசாத் அந்த கட்சியிலிருந்து வெளியேறியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே

குலாம் நபி ஆசாத் ராஜினாமாவை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக மேலும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகினர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ். சிப், ஜி.எம். சரூரி, ஹாஜி அப்துல் ரஷீத், முகமது அமின் பட், குல்சார் அகமது வானி மற்றும் சவுத்ரி முகமது அக்ரம் ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர். அதேசமயம் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.