ஞானவாபி மசூதியில் சிவ லிங்கம்.. உண்மையை எவ்வளவுதான் மறைத்தாலும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்.. பா.ஜ.க.

 
ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதியில் சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை குறிப்பிட்டு, உண்மையை எவ்வளவுதான் மறைத்தாலும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் என உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத மவுரியா தெரிவித்தார்.

வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச் சுவரில் இந்து கடவுள்களான சிருங்கார் கௌரி, பிள்ளையார், ஹனுமன் மற்றும் நந்தி சிலைகள் இருப்பதாகவும், அதற்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சுற்றுச் சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை எதிர்தரப்பினர் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டது. 

ஞானவாபி மசூதி பகுதியில் போலீஸ் குவிப்பு

இதனையடுத்து ஞானவாபி மசூதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த சனிக்கிழமையன்று வீடியோ அளவிடும் பணி தொடங்கியது. இந்த பணி நேற்றோடு முடிவடைந்தது. ஞானவாபி மசூதியில் அளவிடும் பணியின் போது சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் சோகன் லால் ஆர்யா தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அளவிடும் பணி முடிந்ததும், வாரணாசி நீதிமன்றம், சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்கவும், அந்த இடத்துக்கு மக்கள் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ராஜ் சர்மாவுக்கு உத்தரவிட்டது.

கேசவ் பிரசாத் மவுரியா

இது தொடர்பாக உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா டிவிட்டரில், புத்த பூர்ணிமாவின் போது ஞானவாபியில் பாபா மகாதேவ் வெளிப்படுத்தியிருப்பது நாட்டின் நித்திய இந்து மரவுகளுக்கு ஒரு புராண செய்தியை அளித்துள்ளது. உண்மையை எவ்வளவுதான் மறைத்தாலும் ஒரு நாள் அது வெளிச்சத்திற்கு வரும் ஏனென்றால் உண்மையே சிவம். பாபா கி ஜெய், ஹர் ஹர் மகாதேவ் என பதிவு செய்து இருந்தார்.