பொது சிவில் சட்டம்.. உத்தரகாண்டை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் ஆர்வம்.. கேசவ் பிரசாத் மவுரியா சூசகம்

 
கேசவ் பிரசாத் மவுரியா

உத்தரகாண்டை தொடர்ந்து உத்தர பிரதேச பா.ஜ.க. அரசும் பொது சிவில் சிட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிரவமாக உள்ளது. அண்மையில் புஷ்கர் சிங் தாமி  செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் ஒரு குழு (நிபுணர்கள்) அமைக்கப்பட்டு மாநிலத்தில் பொது சிவில் சட்டம் செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது.  பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் என தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம்

இந்நிலையில், உத்தரகாண்டை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து யோகி அரசு ஆலோசித்து வருவதை அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உறுதிப்படுத்தியுள்ளார்.

யோகி

கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொருவரும் சீரான பொது சிவில் சட்டத்தை கோர வேண்டும் மற்றும் வரவேற்க வேண்டும். உத்தர பிரதேச அரசும் இந்த திசையில் சிந்திக்கிறது. நாங்கள் அதற்கு (பொது சிவில் சட்டம்) ஆதரவாக இருக்கிறோம். உத்தர பிரதேசம் மற்றும் நாட்டு மக்களுக்கு பொது சிவில் சட்டம் அவசியம். இதுவும் (பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது) பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும் என தெரிவித்தார்.