சர்தார் பூமிக்கு வாக்கு கேட்டு தொடர்ந்து வராங்க.. ஆனால் ஏன் ஒற்றுமை சிலையை பார்க்கவில்லை.. காந்திகளை தாக்கிய பா.ஜ.க.

 
ஒற்றுமை சிலை

சோனியா, ராகுல் மற்றம் பிரியங்கா சர்தாரின் பூமியான குஜராத்துக்கு தொடர்ந்து வாக்கு கேட்டு வரும் நிலையில், ஏன் இதுவரை அவர்கள் ஒற்றுமை சிலையை பார்வையிட செல்லவில்லை என்பதற்கு காங்கிரஸ் கட்சி மாநில மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க.வின் கேசவ் பிரசாத் மவுரியாக தெரிவித்தார்

குஜராத் மாநிலம் சூரத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தர பிரதேச துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மவுரியா தீவிரமாக பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசுகையில் கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது: முஸ்லிம்களால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்தன்ஜி தாக்கூர் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருந்த கருத்தை குறிப்பிட்டு, திருப்திப்படுத்தும் மற்றும் ஊழலின் தாய் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் இந்த கொள்கையே அதன் வீழ்ச்சிக்குக் காரணம். அவர்கள் (காங்கிரஸ்) மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.  

கேசவ் பிரசாத் மவுரியா

மாநிலம் மற்றும் நாட்டு மக்கள்  அவர்களின் கொள்கைகளையும், அரசியலையும் நிராகரித்துள்ளனர். அது காங்கிரஸ் முகத்தில் மிகப் பெரிய அறையாக இருக்க வேண்டும்.  சர்தார் வல்லபாய் படேலின் உறுதிப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், சோம்நாத் கோயில் இன்னும் இடிந்து விழுந்திருக்கும். சர்தார் வல்லபாய் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒற்றுமை சிலையை கட்டுவதில் நரேந்திர மோடி உறுதியுடன் இருந்தார். மேலும் தேசத்தை கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை மோடி அங்கீகரிக்கிறார். சிலை கட்டுவதற்காக நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டது. 

பிரியங்கா, ராகுல்,சோனியா

சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ சர்தாரின் பூமியான குஜராத்துக்கு தொடர்ந்து வாக்கு கேட்டு வரும் நிலையில், ஏன் இதுவரை அவர்கள் ஒற்றுமை சிலையை பார்வையிட செல்லவில்லை என்பதற்கு காங்கிரஸ் கட்சி மாநில மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மொத்தம்  2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக சூரத் உள்பட 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.