காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை எங்கள் கட்சிக்கு வரவேற்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்... பி.சி.சாக்கோ தகவல்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை எங்கள் கட்சிக்கு வரவேற்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று கேரள தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கேரள மாநில அரசியலில் இன்னும் தீவிரமாக செயல்படும் முயற்சியில் மாநிலம் முழுவதும் உள்ள நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்க தொடங்கியதையடுத்து அம்மாநில காங்கிரஸில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சசி தரூர் எங்கள் கட்சியில் சேர விரும்பினால், அவரை அன்புடன் ஏற்றுக்கொள்வோம் என்று கேரள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தேசியவாத காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ இது தொடர்பாக கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் எங்கள் கட்சியில் சேர விரும்பினால், அவரை அன்புடன் ஏற்றுக்கொள்வோம். பா.ஜ.க.வை தோற்கடிக்கும் ஒரே காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மட்டுமே. விழிஞ்சம் துறைமுகம் கட்டும் விவகாரத்தில் சசி தரூர் கூறிய கருத்தை கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் கூற முடியுமா?. தரூரின் அரசியல் முதிர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. விழிஞ்சம் துறைமுகம் கட்டுவதை நிறுத்துவதை தவிர போராட்டக் குழுவின் அனைத்து கோரிக்கைகளுக்கும் உடன்படுவதாக தரூர் முன்பு கூறியிருந்தார். கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாராவது இப்படி ஒரு கருத்தை கூற முடியுமா?.
காங்கிரஸ் நிராகரித்தாலும் சசி தரூர் திருவனந்தபுரம் எம்.பி.யாகவே இருப்பார். ஆனால் காங்கிரஸ் கட்சிதான் அதை புரிந்து கொள்ளவில்லை. தரூரை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது என்று தெரியவில்லை. பொறாமை காரணமாக இருக்குமா?. சசி தரூரை எங்கள் கட்சிக்கு வரவேற்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் மடியும் இருக்க விரும்பும் ஒரு அரசியல்வாதி அவர்தான். துரதிர்ஷ்டவசமாக, தரூரின் திறமையை இந்தியாவில் புரிந்து கொள்ளாத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. கடந்த பல ஆண்டுகளாக சசி தரூர் எம்.பி.யாக இருந்து வருகிறார். நான் காங்கிரஸில் இருந்தபோது, சோனியா காந்தி உட்பட பல தலைவர்களிடம் தரூரை முன்னணிக்கு கொண்டு வர பரிந்துரைத்துள்ளேன். ஆனால் யாரும் இந்த யோசனைக்கு ஒத்துழைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.