பா.ஜ.க.வுக்கு ஆட்களை அனுப்பும் அமைப்பாக காங்கிரஸ் மாறி வருகிறது... கேரள முதல்வர் பினராயி விஜயன் கிண்டல்

 
பினராயி விஜயன்

பா.ஜ.க.வுக்கு ஆட்களை அனுப்பும் அமைப்பாக காங்கிரஸ் மாறி வருகிறது என காங்கிரஸை கேரள முதல்வர் பினராயி விஜயன் கிண்டல் செய்தார்.

கேரள மாநிலம் திருக்காக்கரா சட்டப்பேரவை தொகுதிக்கு இம்மாதம் 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக உள்ளது. மேலும் அந்த தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

காங்கிரஸ்

திருக்காக்கரா சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் ஒரு கட்சியாக நாடு முழுவதும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு ஆட்களை அனுப்பும் அமைப்பாக காங்கிரஸ் மாறி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பலர் பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சர்களாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மாறியுள்ளனர். 

பா.ஜ.க.

மொத்தத்தில் காங்கிரஸூம் சரிந்து விடும் போலிருக்கிறது. கேரளாவில் இது போன்ற ஒரு கட்சியின் தலைமையிலான முன்னணியில் இருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் திருக்காக்கரா சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.