சில்வர்லைன் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தும்... இந்த திட்டம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது... பினராயி விஜயன்

 
கேரளாவில் பறக்கும் பினராயி விஜயனின் கொடி!

கேரளாவில் சில்வர்லைன் திட்டத்தை அரசு செயல்படுத்தும், இந்த திட்டம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் தெற்கே திருவனந்தபுரத்தையும், வடக்கே காசர்கோடு வரை இணைக்கும்  மித வேக ரயில் பாதை அமைக்கும் திட்டமான கே-ரயில் சில்வர்லைன் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான இடதுசாரி அரசு முன்வைத்துள்ளது.  இந்த திட்டத்தின்படி, திருவனந்தபுரம்-காசர் கோடு இடையே  ரூ.63,941 கோடி செலவில் 11 மாவட்டங்களை உள்ளடக்கும்  532 கி.மீட்டர் தொலைவுக்கு  ரயில் பாதை அமைக்கப்படும். அதேவேளையில், இந்த திட்டத்தால் சுற்றுப்புறச்சூழலில் பாதிப்பு ஏற்படும் என்றும், மக்கள் வாழ்விடத்தை இழப்பார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து  வருகிறது. இந்த சூழ்நிலையில், சில்வர்லைன் திட்டத்தை அரசு நிறைவேற்றும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கே ரயில் திட்டம்

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது: சில்வர்லைன் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தும். மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடக்கின்றன.. இந்த திட்டம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது. தனிப்பட்ட முறையில் கேட்டால் காங்கிரஸ் தலைவர்களும் கூட இந்த திட்டம் அவசியம் என்று கூறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் சில்வர் லைன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் உள்ளபோதிலும், இந்த திட்டத்தை தொடங்குவதில் பினராயி விஜயன் பிடிவாதமாக இருப்பதற்கு அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வி.முரளீதரன்

மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி. முரளீதரன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களை தவறாக வழநடத்த முயற்சிக்கிறார். சில்வர் லைன் திட்டம் எந்த வளர்ச்சியையும் கொண்டு வராது. மக்களை இடமாற்றம் செய்யும். சில்வர் லைன் திட்டத்துக்கு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வளர்ச்சி என்ற பெயரில் மாநில அரசும், ஆட்சியில் இருக்கும் சில தலைவர்களும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள், தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புகிறார்கள். அதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள் என்று தெரிவித்தார்.