வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத கலவரங்கள், பணவீக்கம் குறித்து உங்கள் பதில் என்ன அமித் ஷா ஜி?.. கவிதா கேள்வி

 
அமித் ஷா

வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத கலவரங்கள், பணவீக்கம் குறித்து தெலங்கானா மக்களுக்கு உங்களின் பதில் என்ன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானாவில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் குமாரின் இரண்டாம் கட்ட பாத யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித ஷா நேற்று அங்கு சென்றார். அமித் ஷா தெலங்கானாவுக்கு வருவதற்கு முன்னதாக, தெலங்கானா மேலவை உறுப்பினரும், அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா டிவிட்டரில்,  அமித் ஷாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, தெலங்கானா மக்களுக்கு பதில் அளிக்கும்படி கேட்டு இருந்தார். 

கவிதா

தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதா டிவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளில், அமித்  ஷா தெலங்கானாவுக்கு வரவேற்கிறோம். தெலங்கானாவுக்கு மத்திய அரசுக்கு பாக்கி வைத்துள்ள நிதி ஆயோக் மானியங்கள் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல், பின்தங்கிய பகுதி மானியம் ரூ.1,350  கோடி மற்றும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.2,247 கோடி ஆகியவற்றை எப்போது வழங்கப்படும் என்பதை தெலங்கானா மக்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள். விண்ணை தொடும் பணவீக்கம், நாட்டில் சாதனை படைக்கும் வேலையில்லா திண்டாட்டம், பா.ஜ.க. ஆட்சியின் சொந்த புள்ளிவிவரங்களின்படி, பா.ஜ.க.வின் கீழ் அதிகபட்ச வகுப்புவாத கலவரங்கள், அதிக விலைக்கு எரிபொருள் மற்றும் எல்.பி.ஜி. விற்பனை செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை ஆக்குகிறது இது தொடர்பாக உங்களின் பதில் என்ன அமித் ஷா ஜி?

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

அமித் ஷா ஜி, நீங்கள் இன்று தெலங்கானாவின் அற்புதமான மக்களை சந்திக்கும் போது கடந்த 8 ஆண்டுகளில் தெலங்கானாவுக்கு ஒரு ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்இஆர், ஐஐஐடி, என்ஐடி, மருத்துவக் கல்லூரி அல்லது நவோதயா பள்ளிகளை கூட ஏன் கொடுக்க தவறியது என்பதை சொல்லுங்கள். மதிப்புமிக்க மத்திய அரசின் ஹா கர் ஜலின் திட்டத்துக்கு உத்வேகம் அளித்த மிஷன்ககடியா மற்றும் மிஷன் பகிரதா-க்கு நிதி ஆயோக் பரிந்துரைத்த ரூ.24 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏன் புறக்கணித்தது. கர்நாடகாவில் அப்பர் பத்ரா திட்டம், கென் பெட்வா நதி இணைப்பு திட்டம், பாலமுரு ரங்காரெட்டி லிப்ட் பாசனத் திட்டம் மற்றும் தெலங்கானாவின் காலேஸ்வரம் திட்டத்துக்கு தேசிய திட்ட அந்தஸ்து வழங்க மறுப்பது மத்திய அரசின் அப்பட்டமான பாசாங்குத்தனம் இல்லையா? என பதிவு செய்து இருந்தார்.