பொறுப்பான பதவியில் இருப்பதால், இந்த அணுகுமுறை இருக்கக்கூடாது.. தெலங்கான அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
அஸ்வத் நாராயண்

கர்நாடக தொழிலதிபரை தங்கள் மாநிலத்துக்கு வந்து தொழில் செய்யும்படி அழைத்த  தெலங்கான அமைச்சருக்கு, பொறுப்பான பதவியில் இருப்பதால், இந்த அணுகுமுறை இருக்கக்கூடாது என கர்நாடக அமைச்சர் பதிலடி கொடுத்தார்.

பிரபல தொழிலதிபர் நவீஷ் நரேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதா புகார் தெரிவித்து டிவிட்டரில் டிவிட் செய்து இருந்தார். அதாவது, ஹெஎஸ்/கோரமங்கலாவில் (இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு) ஸ்டார்ட்அப்கள் ஏற்கனவே பில்லியன் டாலர்கள் வரிகளை அளிக்கின்றன. இன்னும் மோசமான சாலைகள், கிட்டத்தட்ட தினசரி மின்வெட்டு, மோசமான தண்ணீர் விநியோகம் மற்றும் பயன்படுத்த முடியாத நடைபாதைகள் உள்ளன. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கை விட கிராமப்புறங்களில் சிறந்த அடிப்படை கட்டமைப்பு உள்ளது. ஹெஎஸ்/கோரமங்கலாவிலிருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையில் அருகில்தான உள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் அங்கு செல்ல 3 மணி நேரம் ஆகிறது என்று பதிவு செய்து இருந்தார்.

கே.டி.ராம ராவ்

இதனையடுத்து தெலங்கான அமைச்சர் கே.டி.ராமராவ்,  ஹைதராபாத் வந்து தொழில் செய்யும்படி தொழிலதிபர் நவீஷ் நரேஷூக்கு டிவிட்டரில் அழைப்பு விடுத்தார். மேலும் கே.டி.ராமராவ் டிவிட்டரில், எங்களிடம் சிறந்த பௌதீக உள்கட்டமைப்பு மற்றும் சமமான நல்ல சமூக உள்கட்டமைப்பு உள்ளது. எங்கள் விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகும். மேலும் நகரத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செல்வது எளிது. மிக முக்கியமாக, எங்கள் அரசாங்கத்தின் கவனம் 3 மந்திரத்தில் உள்ளது: புதுமை, உள்கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் டிவிட்டரில், 2023ல் எங்கள் (காங்கிரஸ்) கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், இந்தியாவின் சிறந்த நகரமாக பெங்களூருவின் பெருமையை மீட்டெடுக்கும் என்று பதில் அளித்து இருந்தார்.

டி.கே.சிவகுமார்

தெலங்கானா அமைச்சர் கே.டி.ராம ராவ் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத்நாராயண் பதிலடி கொடுத்தார். அஸ்வத்நாராயண் இது தொடாபாக கூறியதாவது: கே.டி. ராம ராவின் டிவிட் நல்ல அணுகுமுறை இல்லை. பொறுப்பான பதவியில் இருப்பதால், இந்த அணுகுமுறை இருக்கக்கூடாது. ஒருவரையொருவர் கால்களை இழுக்க முயல்வது எந்த அரசாங்கத்துக்கும் நல்லதல்ல. நாம் இந்தியர்கள், நாம் முழு உலகத்துடன் போட்டியிட வேண்டும்.  டி.கே.சிவகுமார் கனவு காண்கிறார். காங்கிரஸ் ஒரு போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவருக்கு என்ன நம்பகத்தன்மை இருக்கிறது? அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் வழங்கவில்லை. அவருக்கு மீட்பு என்றால் என்னவென்று தெரியாது, சிறந்த எதிர்காலத்தை அவர்களால் வழங்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.