காந்தி பெயரில் சம்பாதித்ததை மக்களிடம் திரும்ப கொடுங்க.. காங்கிரஸ் தலைவர்களை வலியுறுத்திய பா.ஜ.க.

 
அரக ஞானேந்திரா

காந்தி, நேரு பெயரில் சம்பாதித்ததை காங்கிரஸார் மக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் அரக ஞானேந்திரா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சருமான ரமேஷ் குமாரும் கலந்து கொண்டார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

அந்த போராட்டத்தில் ரமேஷ் குமார் பேசுகையில், பண்டிட் நேரு, இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பெயரில் நாம் 3-4 தலைமுறைகளுக்கு போதுமான அளவுக்கு சம்பாதித்துள்ளோம். இப்போது தியாகம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது, அந்த கடன்களை (நன்றி கடன்) நாம் திருப்பி செலுத்த தயாராக இல்லை என்றால் நாம் உண்ணும் உணவில் புழுக்கம் தொற்றிவிடுமோ என்று நான் பயப்படுகிறேன் என தெரிவித்தார். ரமேஷ் குமாரின் பேச்சை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் சம்பாதித்ததை திரும்ப அளிக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

ரமேஷ் குமார்

இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக உள்துறை அமைச்சருமான அரக ஞானேந்திரா கூறுகையில், ரமேஷ் குமார் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது அறிக்கை தீவிரமானது, ஒவ்வொரு காங்கிரஸ் நபரும் தங்களை தாங்களே ஆய்வு செய்து, காந்தி மற்றும் நேருவின் பெயரில் எதை சம்பாதித்து இருந்தாலும் அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது மக்களுக்கு சொந்தமானது மற்றும் திரும்ப அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.