பா.ஜ.க. ஆட்சியில் உங்கள் வாழ்க்கை சிறப்பாகி விட்டதா?.. கர்நாடக மக்களிடம் பிரியங்கா காந்தி கேள்வி

 
பிரியங்கா காந்தி

பா.ஜ.க. ஆட்சியில் உங்கள் வாழ்க்கை சிறப்பாகி விட்டதா?, உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று கர்நாடக மக்களிடம் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் வரும் மே மாதத்துக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் மாநாடுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் மகளிர் காங்கிரஸ் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். எதிர்பார்த்தது போலவே அந்த மாநாட்டில் கர்நாடக காங்கிரஸின் இரண்டாவது தேர்தல் வாக்குறுதியை பிரியங்கா காந்தி அறிவித்தார்.

காங்கிரஸ்

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இல்லத்தரசிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்தார். அந்த தொகை இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு  வைக்கப்படும். க்ருஹ லெட்சுமி என்ற இந்த திட்டத்தின் மூலம் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயனடைவார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.

கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகையில், நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பா.ஜ.க. ஆட்சியில் உங்கள் வாழ்க்கை சிறப்பாகி விட்டதா?. உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? வாக்களிக்கும் முன் கடந்த சில வருடங்களை பார்த்து, உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்யுங்கள். கல்வி, அரசு வேலை வேண்டாமா?. உங்களுக்கும், குடும்பத்துக்கும் தேர்வு  செய்யும் சுதந்திரம் வேண்டாமா?. அரசியல்தான் உங்கள் பலம் என தெரிவித்தார்.