பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம்.. எல்லாவற்றையும் அரசியலாக்குவது கீழ்த்தரமானது.. பொங்கிய கர்நாடக முதல்வர்

 
பசவராஜ் பொம்மை

பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் அடிப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததையடுத்து, எல்லாவற்றையும் அரசியலாக்குவது கீழ்த்தரமானது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. அரசாங்கம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பசவராஜ் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் அந்த மாநிலம் முழுவதுமாக உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக 8,100 வகுப்பறைகளை கட்டி அவற்றுக்கு விவேகானந்தர் பெயரை வைக்க முடிவு செய்துள்ளது. மேலும், அந்த கட்டிடங்களுக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கவும் முடிவு எடுத்துள்ளது. பள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறம் அடிப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸின் பெயரை குறிப்பிடாமல் அந்த கட்சிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கர்நாடக விதான் சபாவில் நேரு படத்துக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, பள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறம் அடிப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:  

வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்

பள்ளிகளுக்கு காவி வண்ணம் அடிக்கும் அரசின் முடிவில் அரசியல் வேண்டாம். எல்லாவற்றையும் அரசியலாக்குவது கீழ்த்தரமானது. நமது தேசியக் கொடியில் காவி நிறம் உள்ளது. காவி நிறத்தின் மீது ஏன் கோபப்படுகிறார்கள்?. சுவாமி விவேகானந்தரின் பெயரில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விவேகானந்தர் ஒரு துறவி. காவி ஆடை அணிந்திருந்தார். விவேகா என்ற சொல்லுக்கு அனைவருக்கும் அறிவு என்று பொருள். அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.