உள்துறை அமைச்சரை ஏன் நியமித்தோம், அவரது மகனை பி.சி.சி.ஐ. தலைவராக்குவதற்கு மட்டுமா?.. அமித் ஷாவை தாக்கிய கன்னையா குமார்

 
ஜெய் ஷா மற்றும் அமித் ஷா

பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய பேசியதை குறிப்பிட்டு, நாம் உள்துறை அமைச்சரை ஏன் நியமித்தோம், அவரது மகனை  இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) தலைவராக்குவதற்கு மட்டுமா? என்று அமித் ஷாவை கன்னையா குமார் விமர்சனம்  செய்தார்.

பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உங்கள் (இந்துக்கள்) வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள், எதுவுமில்லை என்றால் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போது என்ன சூழ்நிலை வரும் என்று தெரியவில்லை, அனைவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. யாராவது நம் வீட்டுக்குள் புகுந்து நம்மை தாக்கினால், தகுந்த பதிலடி கொடுப்பது நமது உரிமை என தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சை பேச்சை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸின் கன்னையா குமார் விமர்சனம் செய்துள்ளார்.

பிரக்யா தாக்கூர்
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவரான கன்னையா குமார் பேசுகையில் கூறியதாவது: உண்மையில் நல்லொழுக்கம் உள்ளவர்கள் வன்முறையை பற்றி பேச மாட்டார்கள். அவர்கள் ஒரு போதும் வெறுப்பு மொழியைப் பற்றி பேச மாட்டார்கள். அவர்கள் ஒரு போதும் வெறுப்பு மொழியைப் பயன்படுத்துவதில்லை, மாறாக மக்களைப் பிரிக்காமல் அவர்கணை ஒன்றிணைக்க மட்டுமே பேசுகிறார்கள்.ஆனால் சந்நியாசி பிரக்யா முற்றிலும் நேர்மாறாக செய்கிறார். அவர் வீட்டில் கூர்மையான கத்திகளை வைத்திருக்கும்படி மக்களை கேட்கிறார். அவள் எந்த வகையான சந்நியாசி என்று எனக்கு தெரியவில்லை. அவர் வன்முறையை பற்றி பேசினார். இந்த அறிக்கையில் ஏதோ திட்டமிடல் இருப்பதாக நான் உணர்கிறேன். 

கன்னையா குமார்

ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய உள்துறை அமைச்சரின் கடமை என்பதால், நாட்டின் உள்துறை அமைச்சரை பயனற்றவர் என்று சந்நியாசி (பிரக்யா) கூற முயன்றதாக நான் நினைக்கிறேன். எனவே நாம் அனைவரும் கத்தியை கூர்மைப்படுத்த வேண்டும். கத்தியை கூர்மைப்படுத்துவது எங்கள் கடமையா என்று நான் இங்கு நிற்கும் அனைத்து காவல்துறையினரிடமும் கேட்க விரும்புகிறேன். கத்தியை கூர்மைப்படுத்தும் வேலையை செய்தால் பாதுகாப்பு படையினர் என்ன செய்வார்கள் அல்லது சட்டம் செய்யும்?. நாம் உள்துறை அமைச்சரை ஏன் நியமித்தோம், அவரது மகனை  இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) தலைவராக்குவதற்கு மட்டுமா?. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பி.சி.சி.ஐ. செயலாளராக உள்ளார்.