நான் இந்து என்று பெருமையுடன் கூறுகிறேன், ஆனால் நான் ஒரு முட்டாள் அல்ல... கமல் நாத்
நான் இந்து என்று பெருமையுடன் கூறுகிறேன், ஆனால் நான் ஒரு முட்டாள் அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: எங்கள் அரசியலில் அடிப்படை மதமாக நாங்கள் கருதவில்லை. நாங்கள் மதத்தை ஒரு நிகழ்வாக ஆக்கவில்லை. எங்கள் மதம் எங்கள் குடும்பத்தின் நிகழ்வு, இது அரசியல் நிகழ்வு அல்ல. நான் இந்து என்று பெருமையுடன் கூறுகிறேன், ஆனால் நான் ஒரு முட்டாள் அல்ல.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய பிரதேச அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கடுமையான அநீதியை இழைக்கிறது. ஏனெனில் பஞ்சாயத்து தேர்தலில் ஓ.பி.சி.களுக்கு 9 முதல் 13 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே அரசு வழங்கியுள்ளது. ஓ.பி.சி.களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு தருவதாக பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் உண்மையில் அது ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களின் இடங்களில் 11.2 சதவீத இடங்களை மட்டுமே வழங்குகிறது.
ஜன்பத் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் 9.5 சதவீதமும், ஜன்பத் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான இடங்களில் 11.5 சதவீதமும், கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் 12.5 சதவீதமும் மட்டுமே ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.