ஆசாத் காஷ்மீர்.. என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, அறிக்கையை திரும்ப பெறுகிறேன்.. கேரள எம்.எல்.ஏ.

 
கே.டி. ஜலீல்

ஆசாத் காஷ்மீர் என்று குறிப்பிடத்தற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தனது அறிக்கையை திரும்ப பெறுவதாகவும் கேரள எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் தெரிவித்துள்ளார்.  

கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பகுதி  ஆசாத் (சுதந்திரமான) காஷ்மீர் அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி செல்வாக்கு இல்லை. பணமும், ராணுவ உதவியும் மட்டுமே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆசாத் காஷ்மீருக்கு சொந்த ராணுவம் இருந்தது. குடியரசு தலைவர் ஜியா உல் ஹக் காலத்தில் ராணுவம் பொதுவானதாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்த பெரிய நிர்வாக அதிகாரமும் பாகிஸ்தான் அரசுக்கு இல்லை. அதிக அளவில் படைகள் குவிக்கப்படுவது காஷ்மீரின் சாரத்தையே மாற்றி விட்டது. 

பிரகலாத் ஜோஷி

காஷ்மீரை இரண்டாக பிரித்ததற்காக மத்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களிடையே கோபம் நிலவுவதை கண்டேன். துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்களையே நீங்கள் எங்கும் பார்க்கலாம். காஷ்மீரிகள் சிரிக்க மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது. பல தசாப்தங்களாக காஷ்மீரின் நிறம் பச்சை. அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டுக் காவலில் உள்ளனர். மாதக்கணக்கில் அரசியல் நடவடிக்கைகள் இல்லை என பதிவு செய்து இருந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்று ஜலீல்  குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஜலீலை துரோகி என்று தாக்கினார். 

காஷ்மீர்

தனது பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து,  தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தனது அறிக்கையை திரும்ப பெறுவதாகவும் கேரள எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் தெரிவித்துள்ளார்.  கே.டி. ஜலீல் பேஸ்புக் பதிவில், சட்டப் பேரவையின் புலம்பெயர்ந்தோர் நலக் குழுவின் ஒரு பகுதியான எனது காஷ்மீர் பயணம் குறித்து எழுதிய கட்டுரையில் நான் கூறிய சில கருத்துக்கள் தவறானவை என்பது எனது கவனத்துக்கு வந்தது. எனது நோக்கத்திற்கு மாறாக விளக்கப்பட்ட அறிக்கையை நான் திரும்ப பெறுகிறேன். சமூகத்தின் நன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும் என தெரிவித்துள்ளார்.