தோல்வியை மறைக்க.. 3வது பெரிய கட்சி என கூறுவது மலிவான அரசியல் - பாஜகவை சாடும் கே.எஸ்.அழகிரி

 
கேஎஸ் அழகிரி

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்துக்கொண்டு, பாஜக 3வது பெரியக்கட்சி என கூறுவதை விட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக அவதூறு கருத்துகளைக் கூறிவருகிறார்கள். தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது.

அண்ணாமலை

மொத்தம் பதிவான வாக்குகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 49.99 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் பா.ஜ.க. 5,594 வார்டுகளில் போட்டியிட்டு 308 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

கே எஸ் அழகிரி

சென்னை மாநகராட்சியில் 16 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 13 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக, பா.ஜ.க. 198 வார்டுகளில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 178 வார்டுகளில் பா.ஜ.க. டெபாசிட் தொகையைப் பறிகொடுத்திருக்கிறது.

தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற, புறக்கணிக்கப்பட்டு வருகிற தமிழக பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவிகித புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.