காவி கொடி இன்று அல்லது வேறொரு நாள் நாட்டின் தேசியக் கொடியாக மாறலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.. பா.ஜ.க. மூத்த தலைவர்

 
காவி கொடி

காவி கொடி இன்று அல்லது என்றாவது ஒரு நாள் இந்நாட்டில் தேசிய கொடியாக மாறலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். தற்போது காவி கொடி தேசிய கொடியாக மாறும் என பேசி புதிய சர்ச்சையை கே.எஸ். ஈஸ்வரப்பாக கிளப்பியுள்ளார். இது தொடர்பாக கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியதாவது: இந்த நாட்டில் காவி கொடி நீண்ட காலமாக மதிக்கப்படுகிறது. 

கே.எஸ்.ஈஸ்வரப்பா

அதற்கு (காவி கொடி) பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டு. காவி கொடி தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ்.-ல் அந்த மதிப்பை நம்மில் வளர்க்க காவி கொடியின் முன் பிரார்த்தனை செய்கிறோம்.  காவி கொடி இன்று அல்லது என்றாவது ஒரு நாள் இந்நாட்டில் தேசிய கொடியாக மாறலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் (காங்கிரஸ்) சொல்லும் போதெல்லாம் நாம்  மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டியதில்லை. 

காங்கிரஸ்

நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி, மூவர்ண கொடிதான் தேசிய கொடி, அதற்கு தகுந்த மரியாதையை நாங்கள் வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் கே.எஸ். ஈஸ்வரப்பா, அயோத்தியை இந்துக்கள் ஏற்கனவே கைப்பற்றிவிட்டனர். இப்போது, காசி காவலில் எடுக்கபட்டுள்ளது, நாளை மதுரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.