5 மாநில தோல்வி எதிர்கட்சிகளுக்கு பாடம்.. தமிழகத்தை போன்ற வியூகம் வேண்டும்..- கே.எஸ்.அழகிரி

 
கே எஸ் அழகிரி

5 மாநில தேர்தல் தோல்விக்கு எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையே காரணம் என்றும், தமிழகத்தைப் போல் வியூகம் அமைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையின்மை காரணமாகத் தான் ஏற்கனவே நான்கு மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஏற்கனவே பெற்ற வெற்றியை விடக் குறைவான எண்ணிக்கையில் தான்  கிடைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

கேஎஸ் அழகிரி

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக திரு. ராகுல் காந்தி அவர்களை அறிவித்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார்.இதனால் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

ஸ்டாலின், ராகுல்காந்தி, பினராயி விஜயன்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கிய படிப்பினையாகும். இந்த படிப்பினையைச் சரியான புரிதலோடு ஏற்றுக் கொண்டு லாபக் கணக்குப் போடாமல், இந்தியாவின் எதிர்கால நலன் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு தமிழகத்தைப் போல் வியூகம் அமைக்க வேண்டும்.  தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.