பாஜக 8 ஆண்டுகளில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - கே.எஸ்.அழகிரி காட்டம்..
பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30 ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ரூபாய் 5 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் மோடியின் கருப்புப் பண ஒழிப்பினால் கிடைத்த பலனாகும்.
மோடி ஆட்சியில் ரூபாய் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கி மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இதில், ரூபாய் 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிவிட்டு 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இவர்களில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக் கடன் 2014 இல் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூபாய் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, அடக்க விலையோடு 50 சதவிகிதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி வழங்கியது. ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி, விவசாயிகளின் எதிர்ப்பினால் பின்னர் திரும்பப் பெற்றது.
நாட்டு மக்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது, கடந்த 8 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் சொத்து கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி, 100 பில்லியன் டாலரை - அதாவது 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உலக கோடீசுவரர்கள் வரிசையில் 10-வது இடத்தை பிடித்திருக்கிறார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் பா.ஜ.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 27 லட்சம் கோடியை மத்திய பா.ஜ.க. அரசு வசூல் செய்திருக்கிறது. இது பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். பா.ஜ.க.வின் ஆட்சி என்பது எண்ணிலடங்காத அவலங்களையும், துன்பங்களையும் கொண்டது. மதவாத வெறுப்பு பேச்சுகளின் மூலமாக மக்களைப் பிளவுபடுத்துகிற பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது. தேர்தல் வரும் போது மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.