டிடிவி தினகரன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும்- கேபி முனுசாமி
வேலூர் மத்திய சிறையில் உள்ள அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்புவை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி சிறையினுள் சந்தித்து பேசினார். கடந்த 1 ஆம் தேதி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்த பிரச்சனையில் எஸ் ஆர் கே அப்பு கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியில் சிறையில் உள்ளார்.
சிறையில் அப்புவை சந்தித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே பி முனுசாமி, “திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும் இதை யாரும் தடுக்க முடியாது. இபிஎஸ் கண்டிப்பாக பொதுச்செயலாளராக பதவி ஏற்பார். மாவட்ட செயலாளர் அவர்களுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் இன்னொரு முறை கூறினால் அவருக்கு மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும். கட்சியில் உண்மையாக உழைக்கின்றவர்களை இயக்கத்தின் மீது பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்களை யாராலும் பிரிக்க முடியாது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது” எனக் கூறினார்.
அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது என்ற சசிகலாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த முனுசாமி, இவர்கள் எல்லாம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதாயம் தேடிய சந்தர்ப்பவாதிகள், தற்போது ஆதாயம் போய்விட்டதே என்பதால் இது போன்ற பிதற்றல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார்.