எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது... தெலங்கானா முதல்வர் மகள் குற்றச்சாட்டு

 
கவிதா

எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று தெலங்கானா முதல்வர் மகள் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.


நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள டெல்லி கலால் கொள்கை வழக்கில், மதுபான மாபியாவுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்தவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று  கவிதா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.

இது தொடர்பாக கவிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. மற்றும் அதன் கட்சிக்காரர்கள் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவர்கள் கையில் அனைத்து ஏஜென்சிகளும் உள்ளன, அவர்கள் என்ன விசாரணை தேவையோ அதை செய்யலாம். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிப்பதில் மிகவும் சத்தமாகவும், கூர்மையாகவும் இருக்கும் கே.சந்திரசேகர் ராவின் விமர்சனங்களால் பா.ஜ.க. பொங்குகிறது.

பர்வேஷ் வர்மா

இதனால் எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. நீங்கள் (பா.ஜ.க.) தவறான நபர்களுடன் மோதுகிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் பர்வேஷ் வர்மா மற்றும் மஞ்சிந்தர் சிர்தா ஆகியோர் தன்னை குற்றம் சாட்டியதையடுத்து, அவர்களுக்கு எதிராக கவிதா அவதூறு வழக்கு தொடர உள்ளார். மேலும், தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக தடை உத்தரவு கோரி கவிதா நீதிமன்றத்தை நாடுவார் என்றும் கூறப்படுகிறது.