உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது.. கர்நாடக காங்கிரஸ் தீர்மானம்

 
கே.சி.வேணுகோபால்

உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச கூடாது என  கர்நாடக காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கர்நாடகாவில் அம்மாநில காங்கிரஸின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், சித்தாராமையா மற்றும் சிவ குமார் உள்பட பல முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்தபிறகு, கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கட்சி அமைப்பு மற்றும் கொள்கை விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் குழு விவாதித்தது. மேலும், 2023 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

ராகுல் காந்தி

கர்நாடகாவிலும், மத்தியிலும் பா.ஜ.க.வின் தவறான ஆட்சிக்கு எதிராக தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் செல்ல வேண்டும் என்று கட்சியின் தலைவர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார். கர்நாடகாவில் மக்களை மையமாக கொண்ட காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர கட்சி தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். கர்நாடகத்தின் ஒட்டு மொத்த தலைமையும் ஒன்று சேர்ந்த 2023 தேர்தலில் கர்நாடகாவை வெல்வோம்.  

காங்கிரஸ்

அறியாமலோ அல்லது தெரிந்தோ சில அறிக்கைகள் ஊடகங்கள் முன் ஆங்காங்கே வெளியிடப்படுகின்றன. அந்த வலையில் சிக்கி கொள்ளாதீர்கள். கட்சி தலைவர்கள் உள்ளேயும், வெளியேயும் மாற்றி மாற்றி பேசக்கூடாது. உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது என கூட்டத்தில் ஒரு மனதாக  முடிவு எடுக்கப்பட்டது. தலைமை பிரச்சினை எதுவும் இல்லை, தனிப்பட்ட கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்களும், உயர்மட்டக் குழுவும் வெற்றி பெற்ற பிறகு தலைவரை முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.