மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்.. மூத்த தலைவர்களை எச்சரித்த காங்கிரஸ்..

 
காங்கிரஸ்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடைபெறவுள்ள  கருத்தரங்கில் எந்த தலைவரும் பங்கேற்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் தனது தலைவர்களை எச்சரித்துள்ளது.

கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது கட்சி மாநாட்டை கண்ணூரில்  வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த உள்ளது.  இந்த மாநாட்டில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை மற்றும் சவால்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூருக்கும், மாநில-மத்திய உறவு குறித்த மற்றொரு அமர்வில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமஸூக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்து இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்நிலையில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு (சசி தரூர்,  கே.வி. தாமஸ்) கேரள காங்கிரஸ் எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு அமர்வு) பங்கேற்பது கட்சியின் தொண்டர்களுக்கு தவறான செய்தியை அனுப்பும்.  

சசி தரூர்

இதனால் மூத்த தலைவர்கள் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளக் கூடாது. வேறு வழியில்லை, அவர்கள் கருத்தங்கில் கலந்து கொள்ள முடியாது. ஏனென்றால் எங்கள் தொண்டர்கள் அதை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு அமர்வில் கலந்து கொள்வது) விரும்ப மாட்டார்கள். அது அவர்களுக்கு  (சசி தரூர்,  கே.வி. தாமஸ்) தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தரங்கில் எந்த தலைவரும் பங்கேற்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.