2024ல் தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது.. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
2024ல் பா.ஜ.க. ஆட்சியிலிருந்து வெளியேறும் என்பதை மறைமுகமாக, தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் இப்போதே காய்களை நகர்த்தி வருகின்றன. தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாற்று எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு பிராந்திய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். கே.சந்திரசேகர் ராவ் நேற்று பெங்களூரு சென்று மதச்சார்ப்பற்ற ஜனதா தள தலைவர்களான முன்னாள் பிரதமர் எச்.டி.தேவு கவுடா மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் மூவரும் தேசிய அரசியல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மதச்சார்ப்பற்ற ஜனதா தள தலைவர்களை சந்தித்த பிறகு கே.சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தேசிய மற்றும் கர்நாடக அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் ஏழைகள்,விவசாயிகள், பழங்குடியினர் மகிழ்ச்சியாக இல்லை. தொழில்கள் மூடப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எச்.டி.குமாரசாமி பேசுகையில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாற்று முன்னணிக்காக செயல்பட்டு வருகிறார். பல தலைவர்களை சந்தித்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். அவர் நாட்டை காப்பாற்றவும், தேசம் மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார் என தெரிவித்தார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று iஹதராபாத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை தவிர்க்கும் நோக்கில், மோடி அங்கு வருவதற்கு முன்னதாகவே, சந்திரசேகர் ராவ் திட்டமிட்டு பெங்களூரு கிளம்பி சென்றார் என கூறப்படுகிறது.