ஓபிஎஸ் மட்டுமே பயனடையும் வகையில் தீர்ப்பு -எடப்பாடி குற்றச்சாட்டு
ஓபிஎஸ் என்கிற தனிநபர் மட்டுமே பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் தனி நீதிபதி. ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அந்த தீர்ப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறது எடப்பாடி தரப்பு.
அதிமுக பொதுக் குழு செல்லாது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இறுதி விசாரணை தொடங்கியது.
நீதிபதிகள் துரைசாமி , சுந்தர் மோகன் அமர்வு முன்பாக இந்த விசாரணை நடந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரிமாசுந்தரம், வைத்தியநாதன், விஜயநாராயணன் உள்ளிட்டோரும், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் சி. எஸ். வைத்தியநாதன் தனது வாதத்தை எடுத்து வைத்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். யூகங்களின் அடிப்படையில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்து இருக்கிறார். ஜூலை 1ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டிருக்கிறார். தனி நீதிபதியின் தீர்ப்பின் முடிவு தவறானது. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பது தவறானது . பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதி உத்தரவு இருக்கிறது என்றார்.
மேலும், கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை என்றும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா? என்றும் தனி நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பது யூகத்தின் அடிப்படையில் ஆனது. தனி நீதிபதி தனது தீர்ப்பில் ஓபிஎஸ் என்ற தனிநபர் பயனடைகின்ற வகையில் மட்டுமே தீர்ப்பு வழங்கியிருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடைகின்ற வகையில் அவர் தீர்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.