பா.ஜ.க.வினருக்கு உணவு வழங்க பொது பணத்தை 90 முறை பயன்படுத்திய முதல்வர் சிவ்ரவாஜ் சவுகான்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
ஜிது பட்வாரி

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்கள் பணத்தில் மொத்தம் ரூ.40 கோடியை பா.ஜ.க. கட்சி அலுவலகத்தின் நிர்வாகிகளுக்கு உணவு வழங்குவதற்காக 90 முறை செலவிட்டுள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிது பட்வாரி குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமையன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிது பட்வாரி பேசுகையில் கூறியதாவது: முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்கள் பணத்தில் மொத்தம் ரூ.40 கோடியை பா.ஜ.க. கட்சி அலுவலகத்தின் நிர்வாகிகளுக்கு உணவு வழங்குவதற்காக 90 முறை செலவிட்டுள்ளார். 2014 முதல் 2018க்கும் இடையில் முதல்வர் வீட்டில் நடந்த கட்சி கூட்டங்களில் மதிய உணவு, தேநீர் மற்றும் அரவு உணவுக்கு மாநில அரசு நிதியளித்தது.ஒரு கப் தேநீர் ரூ.400க்கும் வழங்கப்பட்டது, உணவுக்கு ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த ஆவணம் போலியானது என கண்டறியப்பட்டால் எனது சபை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படலாம். ஆனால் அது உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டுக்கு அதற்கு அடுத்த நாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சட்டப்பேரவையில் பதில் அளித்தார். அவையில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலளிக்கையில், நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகிறீர்கள். பா.ஜ.க. தொண்டர்களுக்கு உணவு வழங்குவதற்கு அரசாங்கத்தின் ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை என்பதை முழுப் பொறுப்புடன் என்னால் சொல்ல முடியும் என தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிது பட்வாரி ஒரு பக்கத்தை மட்டுமே சபையில் காட்டினார், மற்றொரு பக்கத்தில் பா.ஜ.க. அலுவலகம் உணவுக்காக பணம் செலுத்தியது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நரோட்டம் மிஸ்ரா

கமல்நாத் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசில் பட்வாரி அமைச்சராக இருந்தபோது (கேள்வி பதில்) எழுதப்பட்டது. பா.ஜ.க.வை அவதூறு செய்ய அவர் தனது அரசாங்கத்தின் மூலம் பதிலை ஏற்பாடு செய்தார். கமல்நாத் முதல்வராக இருந்தபோது (2018 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை) மாநில மக்கள் தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.131 கோடி ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரம் இது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜிது பட்வாரியின் கருத்துக்கு எதிராக மத்திய பிரதேச விதான் சபாவின் கேள்விகள் மற்றும் குறிப்புக் குழுவிடம் புகார் அளிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.