விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி?.. எம்.எல்.ஏ.க்களை இடம் மாற்றிய முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ராஞ்சியிலிருந்து லட்ராடு அணைக்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க ஓதுக்கீடு பெற்றார். முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு பெற்றதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.புகார் அளித்தது.
இதனையடுத்து முதல்வர் தனது பெயரிலேயே முறைகேடாக சுரங்கம் ஒதுக்கீடு செய்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும், ஜார்க்கண்ட் கவர்னருக்கு, தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், ஜார்க்கண்ட் அரசாங்கத்தை கவிழ்க்க, எதிர்க்கட்சியான பா.ஜ.க.வால் தேர்தல் ஆணைய அறிக்கை (தகுதி நீக்கம் பரிந்துரை) வரைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து முதல்வர் சிபுசோரன் நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். பின். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் பேருந்துகளில் ராஞ்சியில் இருந்து குந்த மாவட்டத்தில் உள்ள லட்ராடு அணைக்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றார். தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஏற்படும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி, ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி பா.ஜ.க. ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என்ற பயம் காரணமாக முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.க்களை இடம் மாற்றியுள்ளார் என கூறப்படுகிறது.