"தமிழன்னு சொன்னா தமிழன் ஆகிடுவாரா?" - பொறிந்து தள்ளிய ஜெயக்குமார்!
குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி கொளுத்திப்போட்ட பட்டாசு தான் பயங்கர சத்தத்துடன் வெடித்து கொண்டிருக்கிறது. நேற்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அவர் பேசியது இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு தமிழ்நாட்டை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். தமிழ்நாட்டிடம் மற்ற இந்திய மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், பாஜகவால் தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது என சவால் விடுத்துள்ளார்.
அதேபோல இந்த உரைக்குப் பின் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர் ஒருவர் ராகுலிடம், "நீங்கள் ஏன் அடிக்கடி தமிழ்நாடு குறித்து பேசுகிறீர்கள்" என கேட்டார். உடனே எதையும் யோசிக்காமல் சட்டென்று, "ஏன்னா நானே தமிழன் தானே" எனக்கூறி வாயடைக்க வைத்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்த வந்திருந்தார் ஜெயக்குமார்.
இதற்குப் பின் செய்தியளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், " திமுக உடன் சேர்ந்து ஒரு தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு, தமிழன் தமிழன் என்று சொன்னால் தமிழர்கள் நம்ப மாட்டார்கள். அப்படி சொல்வதால் அவர் தமிழன் ஆகிவிட மாட்டார். ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரம் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. திமுக மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சமூக நீதி கூட்டமைப்பு என்ற உத்தியை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளனர்.
திமுகவில் பாதி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும். எதிர் வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றிபெறும். தேர்தல் காலத்தில், தமிழ் ஈழம், சமூக நீதி என்ற பல யுக்தியை திமுக கையில் எடுக்கிறது. அதை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை, அருகதையில்லை. சமூக நீதிக்கு ஆபத்தில்லாமல் அதிமுக பாதுகாத்து வைத்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததோடு அதனை பாதுகாத்தவர் ஜெயலலிதா ஆனால் திமுக அரசு மக்களை நம்பிக்கை மோசடி செய்து வருகிறது” என்றார்.