அன்புமணி எம்.பி ஆனதே அதிமுகவால் தான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக இல்லையென்றால் பாமகவிற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமே கிடைத்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாமக மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுக நான்காக உடைந்துள்ளது, திமுக மீது கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சியை நோக்கி நாம் செல்வோம், நமக்கான அங்கீகாரம் வந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வேகமாக முன்னேறி வருகிறது” எனக் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக இல்லையென்றால் பாமகவிற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமே கிடைத்திருக்காது. அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகே பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது, நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். அதிமுகவின் தயவால்தான் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பாமகவால் நுழைய முடிந்தது. அன்புமணி எம்.பி. பதவி வழங்கியதே அதிமுகதான். அன்புமணி ராமதாஸ் ஏறி வந்த ஏணியை மறக்கலாமா? பாமகவுக்கு அடையாளம் குடுத்ததே நாங்கதான். அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயலை அவர் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். ஒன்று சொன்னா நாங்க நூறு சொல்லுவோம், சீண்டினால் பதிலடி தான். அதிமுக செய்ததை அன்புமணி நினைத்து பார்க்க வேண்டும்.
ஓபிஎஸ் போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை. இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை. அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் கூறினார்.