ஓபிஎஸ் தரப்பில் 4 பேர்தான், இபிஎஸ் தலைமையில்தான் அதிமுக இருக்கிறது- ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . பின்னர் அதிமுக அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார் .மேலும்  51 ஆம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார். 

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்


அதன் பின்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது . இதில், கே.பி.முனுசாமி, வேலு மணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு சட்டபபேரவைக்  கூட்டத்தொடரில் பங்கேற்பதா புறக்கணிப்பதா என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு, அதிமுக அலுவலகத்தின் வெளியே ஏழை எளிய பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம். மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் அதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும். 100 மத்திய அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும் , ஆனால் அவர்களால் நல்லது நடந்தால் சரி. உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம், எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் அதிமுக சார்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் 4 பேர் மட்டும் தான் உள்ளனர். 
ஈபிஎஸ் தரப்பில் தான் அதிக அளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . எங்கள் கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களது உரிமையை நிலை நாட்ட வேண்டியதுதான் சபாநாயகரின் கடமை” என்றார்.