முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு ஜெயலலிதா போல 1% துணிச்சல்,தைரியம் உள்ளதா?- ஜெயக்குமார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் ஜெயக்குமார், “உலக நடப்பு,தமிழ்நாட்டில் நடப்பது எதுவும் முதலமைச்சருக்கு தெரியவில்லை,பொம்மை முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் பதவியை துரைமுருகனுக்கு கொடுத்துவிட்டு மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்கலாம். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள்.இன்று தங்கை உடையான் படைக்கு அஞ்சான் என்று நிலையில் முதலமைச்சர் உள்ளார். குடும்பத்தையே கழகமாக கொண்டுள்ள கட்சி திமுக தான். முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு ஜெயலலிதா போல 1% துணிச்சல்,தைரியம் உள்ளதா?அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?.அதிமுக-வில் இது போன்று பேசினால் பொறுப்பில் நீடிக்க முடியுமா?
திமுகவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு அளிக்காததால் அவர்கள் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டனர். முதலமைச்சருக்கு கட்சியிலும் பொதுக்குழுவிலும் மரியாதை இல்லை. முதலமைச்சர் மற்றும் கட்சி தலைவர் பதவியை துரைமுருகனிடம் கொடுத்துவிட்டு முக ஸ்டாலின் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். அதிமுகவில் எவ்வித பிளவும் இல்லை. பிரிவும் இல்லை.அதிமுக 50 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 51வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.” எனக் கூறினார்.