தலைவர் தேர்தலில் போட்டியிட யாருடைய ஒப்புதலும் தேவையில்லை, குறிப்பாக கட்சி தலைமையின் ஒப்புதல்.. ஜெய்ராம் ரமேஷ்

 
ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சோனியா காந்தியிடம் சசி தரூர் தெரிவித்ததாக வெளியான செய்தியை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் போட்டியிட யாருடைய ஒப்புதலும் தேவையில்லை, குறிப்பாக கட்சி தலைமையின் ஒப்புதல் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் கடந்த திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது, கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், கட்சியின் உள்ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என்று சோனியா காந்தியிடம் சசி தரூர் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல் அளித்ததாக  தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சசி தரூர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், இந்திய ஒற்றுமை பயணத்தை வெற்றி பெற செய்வதில் முழுக்கட்சியும் மூழ்கியுள்ளது. அப்படியிருந்தும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எந்த உறுப்பினரும் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது என்பதை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம். இது ஒரு ஜனநாயக  மற்றும் வெளிப்படையான செயல்முறை. போட்டியிடுவதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை, குறிப்பாக கட்சி தலைமையின் ஒப்புதல் என பதிவு செய்து இருந்தார்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிறுவன (கட்சி) தேர்தலில் போட்டியிட எவருக்கும் சுதந்திரம் உள்ளது. இது ஒரு வெளிப்படையான செயல்முறை மற்றும் எந்த அனுமதியும் தேவையில்லை. உங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய ராகுல் ஜி மற்றும் சோனியா ஜியின் அனுமதி தேவையில்லை. சி.பி.எம்., பா.ஜ.க. போலல்லாமல் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் தான். ஒருமித்த கருத்தை கொண்டு வர முயற்சி செய்கிறோம். காமராஜர் மாதிரியை பின்பற்றுவதே சிறந்த வழி. 1 வேட்பாளருக்கு மேல் இருந்தால் 17ம் தேதி தேர்தல் நடக்கும் என தெரிவித்தார்.