ஒவ்வொரு முறையும் பிரதமரின் வாயிலிருந்து வரும் பொய்களை மட்டுமே நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்... ஜெய்ராம் ரமேஷ்
ஒவ்வொரு முறையும் பிரதமரின் வாயிலிருந்து வரும் பொய்களை மட்டுமே நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜம்கன் டோர்னா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: குஜராத்துக்கு எதிரான நபர்கள் (காங்கிரஸ்) கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் குறித்து அவதூறு பரப்ப எல்லா வகையிலும் தீவிரமாக செயல்பட்டனர். எனக்கு எதிராக கடுமையான விமர்சன் செய்தனர், என்னை மரண வியாபாரி என்று கூட அழைத்தனர். ஆனால் இப்போது திடீரென அவர்கள் மௌனமாகி விட்டனர்.
எனக்கு எதிராக அவதூறு பரப்ப, கூக்குரலிட, குழப்பங்கள் விளைவிக்க வெளியாட்களுக்கு (ஆம் ஆத்மி) ஒப்பந்தம் செய்துவிட்டு, அவர்கள் (காங்கிரஸ்) கிராமங்களுக்கு சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.எதிர்க்கட்சியின் இந்த மவுன வியூகம் குறித்து பா.ஜ.க.வினரும், ஆதரவாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டெல்லியில் இருந்து குஜராத்துக்கு எதிராக சதி வேலை செய்பவர்கள்தான், இந்த வியூகத்தை கட்டுப்படுத்துகின்றனர் என்பது எனக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், காங்கிரஸ் தன்னை (மோடி) துஷ்பிரயோகம் செய்ய ஆம் ஆத்மியை அவுட்சோர்ஸிங் செய்தது என்று பிரதமர் அழுகிறார். முற்றிலும் தவறு, 1. நாங்கள் துஷ்பிரயோகம் செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் பிரதமரின் வாயிலிருந்து வரும் பொய்களை மட்டுமே நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். 2. இதேபோன்ற மற்றொரு இனத்தை பயன்படுத்தி ஜூட்ஜீவியை வெளிக்கொணர நாங்கள் அவுட்சோர்ஸ் செய்ய மாட்டோம் என பதிவு செய்துள்ளார்.