நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம், பிரதமர் மோடி வழக்கம்போல் வரவில்லை... காங்கிரஸ் கிண்டல்

 
காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காததை குறிப்பிட்டு, கூட்டத்தில் பிரதமர் மோடி வழக்கம் போல் பங்கேற்கவில்லை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை அரசு கூட்டியது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநிலங்களவையில் அவை தலைவர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் உள்பட பல முக்கிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மோடி

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாததை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிப்பதற்கான அனைத்து கட்சி கூட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. வழக்கம் போல் பிரதமர் வரவில்லை. இது நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது இல்லையா?

ஜெய்ராம் ரமேஷ்

இன்று (நேற்று) நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பவர்கள் உள்பட பல அரசியல் கட்சிகள், மோடி அரசாங்கம் தனது குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஒரு புறம் நற்பெயர் கோருவதும், மறுபுறம் வனஉரிமை சட்டம் 2006ஐக் கொன்றதும் (நீர்த்துக் போக செய்தது) உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டின என பதிவு செய்துள்ளார்.