மோடி, ஷா, ஆசாத்துக்கு பிரேக்கிங் நியூஸ்.. லடாக் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்த காங்கிரஸ்- ஜெய்ராம் ரமேஷ்

 
அமித் ஷா, மோடி

லடாக் ஹில் கவுன்சிலுக்கு நடந்த டெமிஸ்காம் இடைத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றி, மோடி, அமித் ஷா மற்றும் குலாம் நபி ஆசாத்துக்கு பிரேக்கிங் நியூஸ் என்று ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாக தெரிவித்தார்.

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் மொத்தம் 26 தொகுதிகளை உள்ளடக்கிறது. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் பா.ஜ.க.வினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கவுன்சில் டெமிஸ்காம் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸின் சோனம் டோர்ஜி. அண்மையில் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வந்தது.

காங்கிரஸ்

லடாக் ஹில் கவுன்சிலுக்கு நடந்த டெமிஸ்காம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், மோடி, ஷா மற்றும் ஆசாத் ஆகியோருக்கு இதோ சில முக்கிய செய்திகள், லடாக் ஹில் கவுன்சிலுக்கு நடந்த டெமிஸ்காம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. லடாக் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு வாழ்த்துக்கள் என பதிவு செய்து இருந்தார்.

ஜெய்ராம் ரமேஷ்

கடந்த 13ம் தேதியன்று டெமிஸ்காம் தொகுதிக்கான உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் தாஷி துண்டுப் போட்டியிட்டார். பா.ஜ.க. டோர்ஜய் நாம்கியா என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. டெமிஸ்காம் தொகுதி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸின் தாஷி துண்டுப் 861 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் டோர்ஜய் நாம்கி 588 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனையடுத்து டெமிஸ்கான் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது.