யார் வேட்பாளர்?.. மோடியை கிண்டலடித்த ஜெய்ராம் ரமேஷ்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க....
யார் வேட்பாளர் என்று பிரதமர் மோடியை கிண்டலடித்த ஜெய்ராம் ரமேஷுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய இந்திய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19 (இன்று) கடைசி நாளாகும். குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்த ஜகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜகதீப் தங்கர் நேற்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஜகதீப் தங்கர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, அதிகாரி சில ஆவணங்களை பிரதமர் மோடியிடம் அளித்தார். தேர்தல் அதிகாரி அந்த ஆவணங்களை முறைப்படி குடியரசு துணை தலைவர் வேட்பாளர் ஜகதீப் தங்கரிடம் வழங்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரி பிரதமர் மோடியிடம் அளித்தார்,
இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடியை காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்தார். ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் யார் வேட்பாளர்? என்று கேட்டு இருந்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், பத்தாண்டுகளுக்கு முன் ஹமீது அன்சாரி வேட்புமனு தாக்கல் செய்தபோது, சோனியா காந்தி ஆவணத்தை பெற்ற புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, ஜெய்ராம் ரமேஷ் ப்ளாக்குக்கு புதிய குழந்தை, சோனியா காந்தியை ரப்ரி தேவி என்று இழிவாக வர்ணித்தவர், தனது இருப்பை உணர்த்தும் ஆர்வத்தில் சுர்ஜேவாலா செய்ததை விட காங்கிரஸை சேதப்படுத்துவார் என பதிவு செய்துள்ளார்.