குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சியிலிருந்து மேலும் பல தலைவர்கள் காங்கிரஸூக்கு திரும்புவார்கள்.. ஜெய்ராம் ரமேஷ்

 
ஜெய்ராம் ரமேஷ்

குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சியிலிருந்து மேலும் பல தலைவர்கள் நாளை காங்கிரஸூக்கு திரும்புவார்கள் என்று காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த  குலாம் நபி ஆசாத்  கடந்த ஆண்டு அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும், 2022 செப்டம்பர் மாத இறுதியில் ஜனநாயக ஆசாத் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அண்மையில் குலாம் நபி ஆசாத் பேட்டி ஒன்றில், நான் காங்கிரஸில் இருந்து பிரிந்திருந்தாலும், அவர்களின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானவன் அல்ல என தெரிவித்து இருந்தார். இதனால் குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸில் இணைவார் பேசப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்தார்.

குலாம் நபி ஆசாத்

நான் மீண்டும் பழைய வீட்டுக்கு (காங்கிரஸ் கட்சி) செல்ல மாட்டேன், நான் ஒரு போதும் காங்கிரஸில் சேரமாட்டேன். ஜனநாயக ஆசாத் கட்சி (டி.ஏ.பி.) மூலம் எனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று குலாம் நபி ஆசாத் உறுதியாக  தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், இம்மாத தொடக்கத்தில், ஜனநாயக ஆசாத் கட்சியிலிருந்து முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் மற்றும் பீர்சாதா முகமது சயீத் உள்பட அந்த கட்சியின் முக்கியமான 17 தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினர். இது குலாம் நபி ஆசாத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

காங்கிரஸ்

இந்நிலையில், குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சியை காணாமல்போன ஆசாத் கட்சி என்று கிண்டலடித்ததோடு, அந்த கட்சியில் இருந்து மேலும் பல தலைவர்கள் சொந்த கட்சியான காங்கிரஸூக்கு திரும்புவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில்,  நாளை டி.ஏ.பி.யில்- காணாமல் போன கட்சியிலிருந்து  இருந்து  மேலும் பல தலைவர்கள் அவர்களின் விடுமுறையை முடித்து கொண்டு  அவர்கள் எங்கே இருந்தார்களோ அங்கே திரும்புவார்கள். ஜனவரி 19ம் தேதி நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்க தயாராக உள்ள ஜம்முவிலிருந்து வரும் செய்திகளை பார்க்கலாம் என பதிவு செய்து இருந்தார்.