வலுவான காங்கிரஸ் இல்லாமல் பலமான எதிர்க்கட்சி கூட்டணி உருவாக முடியாது... ஜெய்ராம் ரமேஷ் உறுதி

 
காங்கிரஸ்

வலுவான காங்கிரஸ் இல்லாமல் பலமான எதிர்க்கட்சி கூட்டணி உருவாக முடியாது என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் வார்த்தைக்கு காப்புரிமை பெற்றிருக்க வேண்டும் என்று நான் ஒருமுறை கூறியிருந்தேன். நாங்கள் தவறு செய்தோம். இன்று நம் நாட்டில் காங்கிரஸின் பெயரிடப்பட்ட பல கட்சிகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். 

ஜெய்ராம் ரமேஷ்

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் என காங்கிரஸின் பெயரிடப்பட்ட பல கட்சிகள் உள்ளன.  இந்த கட்சிகளின் நிறுவனர்கள் முன்பு காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியாக  இருந்தனர். காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி என்ற யோசனையை கற்பனை செய்ய முடியாது. வலுவான காங்கிரஸ் இல்லாமல் பலமான எதிர்க்கட்சி கூட்டணி உருவாக முடியாது. 

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெவ்வேறு கட்சிகள் பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்து நிறைய எடுத்துக்கொண்டன. ஆனால் எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது.