அசோக் கெலாட்-சச்சின் பைலட் விவகாரம்... காங்கிரஸ் தலைமை கடினமான முடிவுகளை எடுக்க தயங்காது.. ஜெய்ராம் ரமேஷ்

 
கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

அசோக் கெலாட்-சச்சின் பைலட் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை கடினமான முடிவுகளை எடுக்க தயங்காது என்று அந்த கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. காங்கிரஸின்  இளம் தலைவரான சச்சின் பைலட் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக தெரிகிறது. ஆனால் கட்சி தலைமை, கட்சியின் மூத்த தலைவரான அசோக்  கெலாட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பொறுப்பை கொடுத்தது. இது சச்சின் பைலட்டுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் கட்சி தலைமை சமாதானம் செய்ததையடுத்து துணை முதல்வர் பொறுப்பைக் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 2020ல் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

காங்கிரஸ்

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்  மற்றும் துணை முதல்வர் பதவியை சச்சின் பைலட் இழந்தார். தற்போது சச்சின் பைலட் ஒரு காங்கிரஸின் எந்தவொரு பதவியும் இன்றி, ஒரு எம்.எல்.ஏ.வாக உள்ளார். சச்சின் பைலட் கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் அசோக் கெலாட்டுக்கும், அவருக்கும் இடையே மறைமுகமாக மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல். இந்நிலையில், அசோக் கெலாட் அண்மையில், கட்சிக்கு துரோகம் இழைத்த ஒருவரை (சச்சின் பைலட்) முதல்வர் ஆக்க முடியாது என்று தெரிவித்தார். சச்சின் பைலட்டை துரோகி என்று அசோக் கெலாட் கூறியது ராஜஸ்தான் காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சச்சின் பைலட்-அசோக் கெலாட் விவகாரத்தில் கடுமையான முடிவு எடுக்க வேண்டும் என்றால் கட்சி தலைமை எடுக்கும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ்

மத்திய பிரதேசம் இந்தூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ராஜஸ்தானில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கட்சி தலைமை ஒரு தீர்வை கொண்டு வரும். காங்கிரஸை பொறுத்தவரை, அதன் அமைப்பு மிகவும் முக்கியமானது. மக்கள் வருவார்கள், போவார்கள் ஆனால் நாங்கள் முதலில் அமைப்பை கவனித்து அதை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் நாங்கள் எடுப்போம். ஒரு சமரசம் செய்யப்பட வேண்டும் என்றால் (கெலாட் மற்றும் பைலட் இடையே) அது செய்யப்படும். ராஜஸ்தான் பிரச்சினைக்கு சரியான தீர்வு காண்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது என்று நான் நம்புகிறேன். கட்சிக்கு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் தேவை. இந்த தீர்வுக்கான காலக்கெடுவை என்னால் நிர்ணயிக்க முடியாது. அதற்கான காலக்கெடுவை காங்கிரஸ் தலைமைததான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.