உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மோடி அரசுக்கு 5 ஆண்டுகள் ஆனது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
ஜெய்ராம் ரமேஷ்

மன்மோகன் சிங் ஆட்சியில் தயாரான உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் மசோதவை நிறைவேற்ற மோடி அரசாங்கத்துக்கு 5 ஆண்டுகள் ஆயிற்று என காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு  வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103வது அரசியல் அமைப்பு திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றுள்ளார். மேலும் 103வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்தது  மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் செயல்முறைதான் என தெரிவித்தார்.

இந்த மூன்றை மட்டும் மோடி அரசு செய்தால் போதும்.. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.. மன்மோகன் சிங்

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: 2005-06ல் டாக்டர் மன்மோகன் சிங் அரசாங்கத்தால் (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளின் நிலையை ஆய்வு செய்வதற்கான குழு)  சின்ஹோ குழுவின் நியமனத்துடன் தொடங்கப்பட்ட செயல்முறையின் விளைவுதான் இந்த திருத்தம். 2010ம் ஆண்டில் சின்ஹோ குழு தனது அறிக்கையை சமர்பித்தது. அதன் பிறகு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2014ம் ஆண்டுக்குள் மசோதா தயாராகி விட்டது. 

மோடி

மோடி சர்க்கார் அந்த மசோதாவை நிறைவேற்ற ஐந்து ஆண்டுகள் ஆனது. நான் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு 2012ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி  ஆதரிக்கும் மற்றும் கோரும் புதுப்பிக்கப்பட்ட ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து தனது நிலைப்பாட்டை மோடி சர்க்கார் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.