ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவதை காங்கிரஸ் தலைவர்களே விரும்பவில்லை... இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

 
ஜெய்ராம் தாக்கூர்

ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதை காங்கிரஸ் தலைவர்களே விரும்பவில்லை என்று இமாச்சல பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் தாக்கூர் கிண்டல் செய்தார்.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளது. இதனால் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இமாச்சல பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் தாக்கூர் நேற்று தேர்தல் கூட்டங்களில்  பேசுகையில் கூறியதாவது:  காங்கிரஸ் தலைவர்கள் இந்த முறை தங்கள் முறை என்று கூறுகிறார்கள். 

ராகுல் காந்தி

உத்தரகாண்ட் மற்றும் பிற மாநிலங்களிலும் இதையே நீங்கள் கூறினீர்கள் என்று நாங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) கூறுகிறோம். அங்கே என்ன நடந்தது? அவர்கள் மீண்டும் ஆட்சி வந்தார்களா?. காங்கிரஸார் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, இந்த உத்தரவாதம், அந்த உத்தரவாதத்தை நாங்கள் தருவோம் என்று கூறுகிறார்கள். தங்களுக்கே உத்தரவாதம் அளிக்க முடியாதவர்கள், உத்தரவாதம் தருவதாக பேசுவது கேலிக்கூத்தானது. காங்கிரஸ் மூழ்கும் கப்பல். இமாச்சல பிரதேச மக்கள் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கண்டு, கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு தங்கள் மனதை முடிவு செய்தனர். 

காங்கிரஸ்

குஜராத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதை செய்ய முடியாதா?.  இந்த முறை வழக்கத்தை மாற்றுவது குறித்து பா.ஜ.க. பேசும்போது காங்கிரஸ் தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்துக்கு 4 செயல் தலைவர்களை நியமனம் செய்தது. அவர்கள் இரண்டு பேர் பா.ஜ.க.வில் இணைந்து விட்டனர். காங்கிரஸ் வாக்கு கேட்கும் நிலையில் இல்லை. அவர்களின் நிலைமை என்னவென்றால், அவர்களின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நேரத்தில் நடைப்பயணத்துக்கு அனுப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் பிரச்சாரத்துக்கு வருவதை அவரது சொந்த கட்சி தலைவர்களே விரும்பவில்லை. அவர் என்ன பேசுவார் என்று தெரியாததால், காங்கிரஸ் தலைவர்கள் அவரை தேர்தல் நேரத்தில் சுற்றி வர விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.